Wednesday, July 11, 2007

இஸ்லாமோஃபோபியா


இஸ்லாமோஃபோபியா எனும் பெயர் புதிதாக புனையப்பட்டது 1990-ன் மத்தியில் தான். உலகின் பல்வேறு பண்பாடு மற்றும் பன்முகத்துவம் அமைந்த சூழல்களில் தோன்றியதே இந்த சொல்லாடல்.
Phobia என்ற கிரேக்க சொல்லுக்கு "திகில் அல்லது பெரும் அச்சம் கொள்ளல்" எனத் தமிழாக்கம் செய்யலாம். இஸ்லாமோஃபோபியா எனும் வார்த்தைப் பிரயோகத்தை கட்டமைக்க அடிப்படையாகக் கொள்ளும் Xenophobia எனும் வார்த்தைக்கு "புதிய அறிமுகத்தைக் கண்ட அதீத பயம்" அல்லது "புதியவர்களைக் கண்டவுடன் எழும் திகில்" என்று அர்த்தம்.



இஸ்லாமோஃபோபியா என்பது ஏதோ புதிதாய்த் தோற்றுவிக்கப்பட்ட நவநாகரீக வார்த்தைப் பிரயோகம் போல் தோன்றினாலும், அதன் கருப்பொருள் கிறித்துவத்திற்கு எதிரான சிலுவைப்போரில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும், அவ்வெற்றி முழு மேற்கத்திய உலகையும் அதிர்ச்சியடைய வைத்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனக்கூறலாம்.
இஸ்லாம் பற்றிய எதிர்மறை சிந்தனைகளை தன்னுள் அடக்கியிருக்கும் மேற்கத்திய உலகம், இஸ்லாத்தின் மீதான அச்சம் மற்றும் எதிர்ப்பு விஷயத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமும் முஸ்லிம்களும் மேற்கத்திய ஊடகங்களால் திட்டமிட்டு சித்தரிக்கப்படும் மோசமான முறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.



ஒரு விஷயத்தில் ஒருவருக்கு அதீத அச்சம் தோன்ற அவ்விஷயத்தைக் குறித்த முழுமையான விஷய ஞானம் இல்லாமல் இருப்பதோ அல்லது அதனைக் குறித்த தவறான வழிகாட்டல்கள் மற்றும் பிரச்சாரங்களோ தான் முழு காரணமாக அமைய முடியும் என்பதோடு, தான் வேறூன்றி இருக்கும் ஒரு நம்பிக்கையின் மீதான அழுத்தமான விடாப்பிடியான சிந்தனை ஓட்டமும் என்று கூறலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாத்தின் மீதான அதீத அச்ச மனப்பாங்கு இஸ்லாத்தை தவறாக விளங்கியுள்ளவர்களின் மனதில் மட்டும் காணப்படவில்லை. மாறாக, இவ்வாறு இஸ்லாத்தை தவறாக மக்கள் விளங்க வேண்டும் என்பதற்காகவே முழுவீச்சில் பணியாற்றும், இஸ்லாத்தைக் குறித்த முழு அறிவும் உடைய, அதன் வளர்ச்சியை எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த பாடுபடும் சிலரிடையே தான் அது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, இஸ்லாத்தின் அணுகுமுறையும், அது வழங்கும் தீர்க்கமான வாழ்க்கைத் திட்டமும் சுகபோகமாக வாழத்துடிக்கும் சர்வாதிகார மனப்பாங்கு உள்ளவர்களின் மனதில் ஏற்படுத்திய இஸ்லாமோஃபோபியாவே முக்கிய காரணமாகும்.


மாஸ் மீடியா எனும் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம், இஸ்லாத்தைப் பற்றியும், அது முன்வைக்கும் வாழ்க்கைத் திட்டத்தை முறையாக கடைபிடிக்கும் முஸ்லிம்கள் பற்றியும் பெருமளவில் வெறுப்பை உமிழ்ந்த/உமிழும் பிரதிநிதித்துவப்படுத்துதலை, உலக அரசியல் அரங்கில் இஸ்லாமோஃபோபியா தோற்றுவித்த மிக முக்கியமான நிகழ்வு எனக்கூறலாம். ஓரியண்டலிஸ்ட் எனப்படும் கீழைத்தேய மொழிப்புலமையாளர்களின் பட்டியலில் பெருவாரியாக பங்கு வகித்திருந்த யூத , கிறித்துவ இலக்கிய மேதைகள் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைத் திரித்து எழுதத் துவங்கியதற்கு இஸ்லாமோஃபோபியா மிக முக்கிய காரணமாய் அமைந்திருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாம் கூறும் வாழ்வியல் திட்டத்தையும் அதன் கொள்கைகளையும் மிகத்தெளிவாகவே விளங்கியிருந்தனர் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். இவர்கள் இஸ்லாத்தின் மீது அடிப்படையற்ற பலபொய்களை மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் முன்வைத்த பாணி, அவர்கள் அடிமனதில் வேரூன்றி இருந்த குரோத மனப்பான்மைக்கு தடுப்பாக அமைந்திருந்தது.


வெகுஜன ஊடகங்கள் இஸ்லாம் பற்றிய செய்திகளை விவரிக்கும் பாணியின் இரட்டை மனப்பாங்கை ஒரு உதாரணத்திற்கு, வெறும் பிரிட்டனின் ஊடகங்களைக் கையில் எடுத்து மட்டும் பார்த்தோமானால் கூட ஏகப்பட்ட சான்றுகளுடனான உதாரணங்களைக் காட்ட இயலும். Runnymede Trust Commission எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் British Muslims and Islamophobia - வில் பிரிட்டன் சமூகத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது அதீத வெறுப்பு ஏற்படும் வகையிலும், அங்கு பெரும் பிளவை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இஸ்லாம் பற்றிய எதிர்மறை கருத்துக்களை திரித்து திணித்துள்ள ஊடகங்களின் தகிடுத்தனங்களை பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர்.
இத்தகைய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற குரல்கள் பல்வேறு இடங்களில் எழுந்தாலும், தற்போதைய மோசமான சூழ்நிலையை அது மாற்றிவிடப் போவதில்லை என்பது தான் உண்மை.



பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்கள், அங்குள்ள முஸ்லிம்களை எதிர்கொள்கின்ற மனோபாவமும், நடத்தைப் போக்குகளும் வாதத்திற்கு இடமற்ற வகையில் வேறுபாட்டுணர்ச்சி கொண்டவை. சுருக்கமாகச் சொல்வதென்றால் முஸ்லிம்கள் மீதான வெறுப்பும் பயமும் கலந்த உணர்வுகள் இந்நாடுகளில் பிரதிபலிப்பதைக் கண்கூடாகக் காண முடியும். இவ்வாறு பிற மதங்கள், சமூகங்கள் இஸ்லாத்தின் மீதும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் மீதும் செயல்படுத்தும் பகுத்தறிவை மீறிய வேறுபாட்டுணர்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இஸ்லாத்தின் மிகத் தெளிவாகக் கட்டமைப்பக்கப்பட்ட அதன் கோட்பாடுகள் தான் எவ்வித சந்தேகமும் இல்லை.


உலகத்தில் அதிக அளவில் வளர்ந்து வரும் ஒரு சமயமான இஸ்லாத்தைத் தழுவும் மக்கள் தொகை பற்றிய புள்ளிவிபரங்களும், அவை தரும் அதீத பயமுமே உலக அளவில் இஸ்லாமோஃபோபியாவின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். தவறான சித்தாந்தங்களும், எதிர்மறை கருத்துக்களும் வெகுஜன ஊடகங்களால் மிகப்பரவலாக திட்டமிட்டே உருவகப்படுத்தப்பட்டாலும் அதனையும் மீறிய இஸ்லாமிய வளர்ச்சியைக் கண்ட பிரமிப்பு தரும் உள்ளுதறல், மேற்குலகுக்கு "இஸ்லாமோஃபோபியா" எனும் அச்சத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது.


ஒருவிதத்தில் இஸ்லாத்தின் அதிவேக வளர்ச்சி எவ்வளவுக்கெவ்வளவு இஸ்லாமோஃபோபியாவை அதிகரிக்க வைக்கின்றதோ, அதனைவிட வீரியமாக இஸ்லாத்தின் பரவலுக்கும், வளர்ச்சிக்கும் அதே இஸ்லாமோஃபோபியா தூண்டுகோலாக அமைகின்றது என்று கூறலாம்.
இஸ்லாமோஃபோபியா எனும் உருவகம் அவப்பெயரிலும் இஸ்லாத்திற்கு ஓர் நற்பேறு என்பது உண்மை தான் போலும்.


from :சத்தியமார்க்கம்.காம்